தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (17-11-26) தலைநகர் டெல்லிக்குச் சென்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி சுமார் ரூ.5,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளதாகவும், அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன், மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “நவோதயா பள்ளி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஏற்கெனவே 38 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. அந்த மாதிரி பள்ளிகளில் ரிசல்ட்டும் ரொம்ப நல்லாருக்கு, அதை தான் மத்திய அமைச்சரிடம் சுட்டிக் காண்பித்திருக்கிறேன்.
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாதிரி பள்ளிகளில் படித்த குழந்தைகள் தான் சேர்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே மாதிரி பள்ளிகள் இருப்பதால், நவோதயா பள்ளிகள் தேவையில்லை. இதை சுட்டிக் காண்பித்திருக்கிறோம். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது, நல்ல முடிவு கிடைக்கும்” என்று கூறினார்.









